2025 ஏப்ரல் 26
மனிதனின் உணவு, ஆடை, இவைகளுக்கு அடுத்தபடியாக இருப்பிடம்.சொந்த இடம் இன்றைக்கு ஒருவரின் அந்தஸ்தை உயர்த்துகிறது. ஒரு கால கட்டத்தில் மக்களில் கவனம் இல்லாத விலை மதிப்பில்லாத தரிசு நிலங்கள் இன்றைக்கு கோடிகணக்குகளில் விலை மதிக்க கூடிய வகையில் உயர்ந்து நிற்கின்றன. ஒருவன் சொத்துடையவனாக இருந்தால் அவனுடைய வாழ்நாள், அவனுடைய குடும்பம், இவைகள் அனைத்தும் சிறப்பானதாக அமையும், மற்றவர்கள் மத்தியில் மதிக்கக் கூடியதாகவும்,சொத்துக்களை சேர்ப்பதும், அவற்றின் மூலம் வருமானங்களை பெருக்குவதும், மனிதனின் இன்றைய அத்தியாவசிய தேவையாக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
இந்த வகையில் நாடு முழுவதும் ஏராளமான சொத்துகளுக்கு சொந்தமானவர்கள் முஸ்லிம்கள். அவைகள் நன்மையினை நாடி முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ஒதுக்கப்பட்ட சொத்துக்கள் வக்பு சொத்துகளாக அழைக்கப்படுகின்றன. இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு அன்று முதல் இன்றைய காலம் வரை வக்பு வாரியத்திடமும், அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களிடத்திலும் இருந்துள்ளது.
தமிழகத்தில் சில முஸ்லிம் செல்வந்தர்களால் தங்களுடைய சொந்த இடங்களில் சிறுபான்மையினருக்கான கல்வி வழங்கும் அரசின் வாய்ப்பை பயன்படுத்தி தங்களுடைய சொந்த பணங்களில் கல்வி நிறுவனங்கள் அமைத்து இஸ்லாமிய இளைஞர்களுக்கு கல்விகளை கற்று தந்துள்ளார்கள். இல்லையெனில் அதுவும் முஸ்லிம்களின் மிகுதியானவர்களுக்கு கிடைத்திருக்காது.
வக்பு நிலத்தை வைத்துக் நிர்வகிக்கும் முஸ்லிம்களால் முஸ்லிம் சமூக முன்னேற்றத்திற்காகவும், உரிய மேலாண்மைக்கும் இவற்றை பயன்படுத்த தவறியதோடு வெளிப்படையின்மையின்றி இருந்து விட்டனர். தமிழகத்தில் கூட முக்கிய நகரங்களில் வக்பு சொத்துக்கள் கட்சி அலுவலகங்களாகவும், தனியாருக்கு சொந்தமாகவும் இருந்து வருவதற்கு வக்பு சொத்துக்களை நிர்வகித்தவர்களின் ஆதரவும் ஒரு காரணம் ஆகும். இதேபோன்று இந்தியாவில் பல மாநிலங்களிலும் இந்த நிலையும் அதிகபட்சமாக உ.பியில் 80 சதவீத வக்பு நிலங்களை மாநில அரசுகளே ஆக்கிரமித்து உள்ளதாக மௌலானா கல்பே ஜவேத் தெரிவித்துள்ளார்.
வக்பு சொத்துகளை அபகரிப்பதில் காங்கிரஸ் கட்சி குருவாகும், அவற்றை தொடர்ந்து அந்தந்த மாநில கட்சிகளுக்கும் இதில் பங்குண்டு, இதைத் தொடர்ந்து தற்போது ஒன்றிய பாஜக அரசு வக்பு திருத்த சட்டம் என்ற பெயரில் அனைத்துக் கட்சிகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு வக்பு சொத்துகளை நேரடியாக கைப்பற்றிக் கொள்ள குருகளுக்கெல்லாம் குருவாகிவிட்டனர்.
வக்பு சொத்துகளை ஒன்றிய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடங்களை அபகரிக்க தயாராகிவிட்டன. இவற்றை சற்றும் எதிர்பார்த்திடாத முஸ்லிம் சமுதாயம் வக்பு திருத்த சட்டத்திற்கு பின் எதிர்த்து வீதியில் இறங்கி போராடுவதோடு முடிந்து விடாமல். இனியாவது இவற்றை தங்களுடைய பகுதியில் எவ்வளவு வக்பு நிலங்கள் உள்ளன. அவற்றின் சர்வே எண்கள், நிலப்பரப்பு அளவுகள்,எஞ்சியுள்ள பகுதிகள், அவற்றின் தற்போதைய நிலைகள், அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் போன்றவற்றை அனைத்து இளைய இஸ்லாமிய தலைமுறையினரும் அறியக் கூடிய வகையிலும், வெளிப்படைத் தன்மையோடு வக்பு சொத்துக்கள் குறித்து தகவல்களை பொறுப்பாளர்கள் அதன் செயல் திட்டங்களை தெரியப்படுத்தி செயல்படுத்திட வேண்டும் என்பதே இன்றைய இஸ்லாமியர்களின் எதிர்பார்ப்பாகும்.